Digana News
31/05/2026
பத்து வயது தங்கையை 15 வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை செய்த துயரச் சம்பவம் – ஏறாவூரில் அதிர்ச்சி
ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில், 10 வயது சிறுமி ஒருவர் தனது 15 வயது சகோதரனால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் முறையே 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களுக்கு இடம்பெயர்ந்திருந்தன. பின்னர் அந்த முகாமில் வசித்த திருகோணமலையைச் சேர்ந்த ஆணும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றனர்.
சுமார் 35 ஆண்டுகள் அகதி முகாம்களில் வாழ்ந்த பின்னர், குடியுரிமை தொடர்பான சிக்கல்களால் தாய்நாட்டிற்கு திரும்ப முடிவு செய்த இக்குடும்பம், 07.02.2026 அன்று இலங்கைக்கு வந்தது. ஆரம்பத்தில் செங்கலடியில் தங்கியிருந்த அவர்கள், பின்னர் ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியில் வீடு ஒன்றை வாங்கி 05.04.2026 முதல் அங்கு வசித்து வந்துள்ளனர்.
குழந்தைகளின் தந்தை புகைப்பட மற்றும் ஸ்டூடியோத் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், தாய் தனது தாயாரின் உடல்நலக் காரணமாக 19.05.2026 அன்று இந்தியா சென்றிருந்தார். இதனால் வீட்டில் தந்தையும் இரு பிள்ளைகளும் மட்டுமே இருந்தனர்.
28.05.2026 அன்று காலை மகனை தனியார் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு, மகளை ஒரு பிறந்தநாள் நிகழ்வின் புகைப்படப் பணிக்காக தந்தை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து, இரு பிள்ளைகளையும் வீட்டில் இருக்குமாறு கூறி, உணவு தயாரித்து வைத்திருப்பதாகவும், தாய் தொலைபேசியில் அழைத்தால் பேசுமாறும் அறிவுறுத்தி தனது கைப்பேசியை அவர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
பிற்பகலில் தந்தை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதில் கிடைக்காததால், மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மகள் குளியலறையில் நீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் வாளிக்குள் தலை அமிழ்ந்த நிலையில் கிடந்ததை கண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி, சிறுமியின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகக் கண்டறிந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் இந்தியாவில் இருந்த தாய் 29.05.2026 அன்று நாடு திரும்பிய பின்னர், மகனை தனியாக விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக தங்கையுடன் ஏற்பட்ட தகராறின் போது, கோபமடைந்த சிறுவன் தங்கையைத் தாக்கி கீழே தள்ளியதுடன், கைகளால் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் பயத்தால் சம்பவத்தை மறைக்க முயன்று குளியலறையில் நீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் தங்கையை வைத்துவிட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை பெற்றோர் உடனடியாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சிறுவன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
30.05.2026 அன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கைகளால் கழுத்தை நெரித்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த சிறுவன் சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குடும்பங்களிடையே குழந்தைகளின் நடத்தை, கோபக் கட்டுப்பாடு மற்றும் கைத்தொலைபேசி பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
20/05/2026
அமெரிக்க இஸ்ரேல் செல்லும் இடங்களில் இப்படித்தான் ஜனநாயகம், மனித உரிமை, அபிவிருத்தி எல்லாம் இருக்கும்.
Nizam Salih
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kandy