Jet Media

Jet Media

Share

08/06/2026

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இறுதித் தீர்ப்பு வரும் வரை பொதுவெளியில் அவதூறு பரப்பக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, கடந்த மே 16 ஆம் தேதி ஜெயம் ரவி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ரவி மோகன் நீதிமன்றத்தில் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் தனக்கு ஜீவனாம்ச பணம் வழங்கப்படவில்லை எனக் கூறி இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இரண்டு வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு வார காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, காலக்கெடுவை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது எனத் தீவிரமாக வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். மேலும், ஜீவனாம்சம் தொடர்பான இந்த விவகாரம் குறித்துக் குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறும் அறிவுறுத்தினார்.

07/06/2026

நாட்டை பொறுப்பேற்க தயார்: 2029 ஆட்சிமாற்றம் குறித்து ராஜித சேனாரத்ன கருத்து

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்பாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடிய சாத்தியம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை சந்தித்தால் அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினமானதாக இருக்கும் என ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டின் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டுக்கு சாதகமான முடிவுகளை பெறக்கூடியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது பொருளாதார மீட்சித் திட்டங்களால் சர்வதேச ரீதியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டெடுக்கும் பணியில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் இணைந்து செயல்படுவார் எனவும், தேவைப்பட்டால் அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் சமூக அதிருப்தி அதிகரித்து புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் அடிப்படையில், 2029ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website